Saturday, May 14, 2016

தேர்தல்_யாருக்கு என்னுடைய வாக்கு? சிந்திப்பீர்!!

நமது கன்னியாகுமரி மாவட்டம் மற்ற மாவட்டங்களை விட அமைப்பு ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் கொஞ்சம் வேறுபட்டது, தொடக்கத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் கேரளாவின் பழக்கவழக்கங்களின் தாக்கம் அதிகம். நமது மாவட்டத்தில் உள்ளவர்களில் கல்வியறிவும், தமிழ் நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களை விட‌ அதிகம். மேலும் தொழில்களுக்காக வெளிநாட்டிற்குச் செல்பவர்களின் சதவீதமும் குறிப்பிட்ட அளவு அதிகம், பெரும்பான்மையான வீடுகளில் எவராவது ஒருத்தர் வெளிநாட்டில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணி செய்பவராகத் தான் இருப்பார். அவரால் தான் அந்தக் குடும்பத்தின் முன்னேற்றம் தொடங்கியிருக்கும். பெண்களின் கல்வியறிவின் தவீதமும் அதிகம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்க‌ள் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலானமாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாகபணிபுரிவதைக் கண்டிப்பாக பார்க்க முடியும், ஆனால் கன்னியாகுமரியில் உள்ள பள்ளிகளில் மற்ற மாவட்ட ஆசிரியர்களைப் பார்ப்பது அரிது.

மழை பொழிவிலும் கண்டிப்பாக மற்ற மாவட்டங்களை விட நமது மாவட்டம் வேறுபட்டே இருக்கும். ஆறு, அணை, குளம் என்று இயற்கை வளங்களிற்கும் குறைவில்லை. விவசாயத்திற்குப் பெரிதும் சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் இன்றைக்கு நமது மாவட்டத்தின் விவசாயம் எந்தளவிற்கு அரசால் ஊக்குவிக்கப் படுகிறது என்பதற்கு, விளைநிலங்களில் கட்டப்படும் கல்லூரிகளே சாட்சி.



தேர்தலில் மற்ற மாவட்டங்களில் கடுமையாக குற்றம் சாட்டப்படும் "வாக்குக்கு பணம்" என்பது நமது மாவட்டங்களில் அதிகமாகப் பார்க்க முடியாது என்பது என் எண்ணம், வெளிப்படையாக பணத்தை மக்கள் முன்னிலையில் வினியோகிக்க முடியாது. அதற்கு ஆசைப்படும் மக்களின் மனநிலையைத் தாண்டிய மாவட்டம் நமது கன்னியாகுமரி மாவட்டம் என்று சொல்வேன். தேர்தல் நேரத்தில் ஊரில் இருக்கும் மக்களில், பணத்தைத் தாண்டி பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கிறார்கள், வாக்களிக்காமல் இருப்பது மிககுறைவாகவே இருக்கும்.

நமது மாவட்டத்தில் இருக்கும் ஆறு தொகுதிகளிலும் தேசிய அளவில் லுவாக இருக்கும் இரண்டு கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆக இருக்கட்டும், மாநில அளவில் வலுவாகஇருக்கும் திமுக மற்றும் அதிமுகவாக இருக்கட்டும் இவற்றுக்கு மாறி மாறி தொடர்ச்சியாக எம்.எல். மற்றும் எம்.பி என்று பதவிகள் கொடுத்திருக்கிறோம், சில தொகுதிகளில் கம்மூனிஸ்ட் தோழர்களும் எம்.எல்.‍‍ வாகஇருந்திருக்கிறார்கள். அதனால் இந்தத் தேர்தலில் வலுவாக இருக்கும் எந்தக் கட்சியும் எங்களுக்கு வாய்ப்புகள் தரவில்லை என்று நமது மாவட்டத்தில் சொல்ல முடியாது. எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் எனக்கு நினைவு தெரிந்து கடந்த 20 வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மாவட்டத்திற்கான கீழ்கண்டதிட்டங்கள் எதுவும் இன்றுவரை அதிகாரத்திற்கு வந்தவர்களால் நிறைவேற்றப் படவில்லை.

1) ரப்பர் தொழிற்சாலை கொண்டுவரப்படும்
2) அதிநவீனமீன்பிடி துறைமுகம்
3) மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை
4) குளச்சல் பன்னாட்டுத் துறைமுகம்
5) சுற்றுலாத் தலங்கள் நவீனப்படுத்தப்படும்
6) தோவாளை பூ உற்பத்தியாளர்களுக்காகமதிப்பு கூட்டுதல் தொழிற்சாலை அமைத்தல்
7) தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்துதல் (காவல்கிணறு முதல் திருவனந்தபுரம்)
8) விவசாய பாசனத்திற்கான ஆறுகள், குளங்கள், அணைகள் தூர்வாரப்படும்

இவ்வாறு ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லப்படும் அதே வாக்குறுதி திட்டங்கள் தான், இப்போது நடைபெறும் தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியின் சார்பாகச் சொல்லப்படுகிறது. இன்னும் எத்தனை வருடங்கள் தான் இப்படியே வாக்குறுதிகளாக மட்டுமே இவை இருக்கப் போகிறதோ!

இன்றைக்குத் தமிழ் நாட்டில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் யுத்தி வெகுவாக பரவி வருகிறது, அதனால் நேர்மையானசாதாரண குடிமகனால் தேர்தலில் நிற்பது என்பதே மிகப் பெரிய சவாலாக இருக்கிறது, பணம் படைத்த கோடிஸ்வரர்கள் மட்டுமே பங்குபெறும் ஒரு தொழிலாக மாறி வருகிறது. மாற்றம் வேண்டும் என்று இன்று பேசும் சிலரும் கட்சிகளில் தலைமை நல்ல நேர்மையான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்றைக்குக் கட்சிகள் என்பதே பெரிய கார்பரேட் நிறுவனங்களின் பணத்தில் தான் நடக்கிறது, இந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த கார்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக சட்டத்தை வளைக்கிறார்கள், அவர்கள் எப்படி நேர்மையான வேட்பாளர்களை நிறுத்துவார்கள். அப்படியே கட்சியின் பாரம்பரிய தொண்டன் என்று ஒரு சிலரை அந்தப் பெரிய கட்சிகள் நிறுத்தினாலும், செலவழிக்க பணம் இல்லாமல் மக்களால் தோற்கடிக்கப்படுகிறார்கள், மறுதேர்தலில் உன்னால் வெற்றிபெற முடியாது என்று பணம் செலவு செய்து வெற்றிபெற தகுதியானவர்களை நிறுத்துகிறார்கள்.



மக்களே! இளைஞர்களே! இந்தத் தேர்தலிலாவது வலுவானகட்சி வேட்பாளர், ஆளும் கட்சி வேட்பாளர், ஆண்ட கட்சி வேட்பாளர், சிறிய கட்சி வேட்பாளர், எனது ஜாதி வேட்பாளர், எனது மத வேட்பாளர், பணம் செலவு செய்யும் வேட்பாளர் என்ற வெளிப்புற அடையாளங்களைத் தவிர்த்து நேர்மையான, சிந்தனை தெளிவு கொண்ட ஆடம்பரம் இல்லாத வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது மற்ற மாவட்டங்களுக்குச் சாத்தியமா? தெரியவில்லை, அதிகம் படித்த, வாக்குக்கு பணம் வாங்காதநமது மாவட்ட மக்களால் முடியும் என்று நம்புகிறேன்!

நேர்மையான வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள், மக்கள் அவர்களை அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் கண்டிப்பாக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும், கோடிஸ்வரர்களை வேட்பாளர் ஆக்குவதற்குத் தேடும் இன்றையகட்சிகள் கண்டிப்பாககொள்கையாளர்களையும் நேர்மையாளர்களையும் கண்டிப்பாக தேடும்.


மாற்றம் என்பது தென்கோடி குமரியில் இருந்து தொடங்கட்டும்!!

தோழமையுடன்,
ஸ்டீபன்.

6 comments:

  1. நல்ல அருமையான கருத்துக்கள் ஸ்டீபன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

    ReplyDelete