Saturday, May 14, 2016

புனித மிக்கேல் அதிதூதர் வரலாறு

புனித மிக்கேல் அதிதூதர் வரலாறு 

விண்ணுலகில் நவ விலாச வான் தூதர்களின் தலைவர் புனித மிக்கேல்.  உலகம் படைக்கப்படும் முன்னர் தூதர்களின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டவன் லூசிபர். உலகிற்கு மீட்பர் தேவை மீட்பது தன் மைந்தன் என இறைவன் திருவுளமானார் அதிதூதராக தான் இருக்க. மனுவுரு எடுக்கும் மீட்பரை அராதிக்கமட்டேன் என்ற இறுமாப்பு லூசிபரில் எழுந்தது. அகங்காரம் கொண்டான் ஆணவத்தால் தேவனையே எதிர்த்தான். நல்வழி காட்ட மிக்கேல் அதிதூதர் விரைந்தார். அவரின் நல்லுரைகளை உதறித்தள்ளினான்   லூசிபர். 

               "பரத்தில் பணிவதை விட நரகில் ஆட்சிபுரிவதே மேல் " என்றான்.
   இறைவனுக்கு நிகரானவன் யார்? என வீரமுழக்கமிட்டு போராடி லூசிபரையும் அவன் சகாக்களையும் எரிநரகில் வீழ்த்தினார்  மிக்கேல் அதிதூதர்.  மிக்கேல் என்பதின் பொருள், இறைவனுக்கு நிகரானவன் யார் என்பதே.

"வைகறைப்  புதல்வனே, விடிவெள்ளியே, வானினின்று நீ வீழ்த்த வகைதான் என்னே!"          (இசையாஸ் 14/12) 

"உன்னதருக்கு ஒப்பாக என்னை ஆக்கிக்கொள்வேன் என்று நீ உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய். ஆயினும் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய் படுகுழியின் ஆழத்தில் வீழ்த்தப்பட்டாய்.        (இசையாஸ்  14/14,15)

"பின்பு ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும், ஒரு பெரிய சங்கிலியையும் தன்  கையில் பிடித்துக்கொண்டு, வானத்திலிருந்து இறங்கி வரக்கண்டேன், சாத்தானென்று சொல்லப்பட்ட ஆதிசர்ப்பமகிய பறவை நாகத்தை அவர் பிடித்து ஆயிரம் வருடமளவாக அவர் கட்டி வைத்து அது ஜனங்களை மோசம் போகாதபடிக்கு, அதை பாதாளத்தில் தள்ளியடைத்து, அதன் மேல் முத்திரையிட்டார்"     (காட்சியாகமம்  20/1மூ 3) 

     இங்கு ஆயிரம் வருடங்கள் என்பது அனேக யுகங்களைக் குறிக்கும், இவ்வாறு குறிப்பிடப்பட்ட தேவன் தூய  மிக்கேலே  

காட்சியாகமம்  12/7 முதல் 9 வரை உள்ள வசனங்கள் வருமாறு :- 

"அன்றியும் வானத்திலே ஒரு பெரிய யுத்தம் உண்டாயிற்று. மிக்கேலும் அவர் தூதர்களும் பறவை நாகத்தோடு யுத்தம் செய்தார்கள். பறவை நாகமும் அவனுடைய தூதர்களும் யுத்தம் செய்தார்கள் அவர்கள் ஜெயங்கோள்ளவும் இல்லை. வானத்திலே அவர்கள் இருந்த இடம் அது முதல் காணப்படவுமில்லை. அப்படியே ஆதி சர்ப்பமாகிய அந்தப் பெரிய பறவை நாகம் வெளியே தள்ளப்பட்டது. அதற்கு பேய் என்றும் சாத்தான் என்றும் பெயர். அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது. அதன் தூதர்களும் தள்ளப்பட்டார்கள்." 

          இதனால்தான்  தூய மிக்கேல் அதிதூதரின் சொரூபத்தில், அவர் பாதத்தின் கீழ் பசாசு மிதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம் 

           பசாசுக்கு அதிதூதர் மிக்கேல் என்றாலே நடுக்கம். அவரிடம் போரிட்டு வெற்றி கொள்ள அதனால் இயலாது அதிதூதர் மிக்கேல் வல்லமை மிக்கவர். ஆயினும் தாழ்ச்சியுடயவர். அவர் சமாதான தூதன். 

           மரண வேளையில் நம்முடனிருந்து பசாசுக்களை ஓட்டுபவர். உலகமுடிவில் எக்காளம் ஊதும் அதிதூதர், அவர் எனக் கருதப்படுகிறது இதனை :- 

           "அக்காலத்தில் உன் இனத்தாருக்குக் காவலாக சேனைத் தலைவரான மிக்கேல் எழுப்புவார், மக்களினம் தோன்றியதுமுதல் அக்காலம்வரை இருந்திராத துன்ப காலம் வரும்." 

           "யார் யார் பெயர் நூலில் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்ணில் உறங்குகிற பலருள் சிலர் முடிவில்லா வாழ்வடைவதற்கும் , சிலர் முடிவில்லா இழிவுக்கும், நிந்தைக்கும்  ஆளாவதற்கும் எழுந்திருப்பார்கள்"   (தானியேல்  12/1,2) என்ற வேதப்பகுதி உறுதிப்படுத்துகிறது. 

           13-ம் சிங்கராயர் பாப்பிறை ஒரு தினம் திருப்பலி நிறைவேற்றி முடித்தவுடன் மூர்ச்சையானார், யாவரும் அவர் இறந்துவிட்டார் என எண்ணினர் வெகு நேரத்திற்குப்பின் அவர் சுயநினைவு பெற்றார். திருச்சபையின் மீது சாத்தானால் வர இருக்கும் தீதுகளை அவர் காட்சியாகக் கண்டு நடுங்கி விட்டார். தூய மிக்கேல் அதிதூதர் விரைந்துவந்து சாத்தானுடன் போர் செய்து, அதனையும் தோழர்களையும் நரகத்தில் தள்ளியதையும் அக்காட்சியில் அவர் கண்டார். உடனே தூய பிதா அவர் மீது ஒரு ஜெபத்தை எழுதி உலகமெங்கும் அது செய்யப்படவேண்டுமென ஆணையிட்டார். 

          திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே அவர் திருச்சபையின் காவற்தூதராகவே போற்றப்பட்டார். ஆயினும் 5-ம் நூற்றாண்டில்தான் அவர் திருநாள் செப்டம்பர் 29-ம் நாள் கொண்டாடப்படவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதிலிருந்தே மைக்கேல் மாஸ் விடுமுறை தோன்றியது.

             திருநாள் கொண்டாடிட நடந்த நிகழ்ச்சி சுவையானது. 

           கி.பி.404-ல் தூயமிக்கேல் காட்சி தந்ததால் சிபான்றோ என்ற இடத்தில் உள்ள குகையொன்று சிறப்பு பெற்றது. சிபான்றோ மக்கள் மீது அண்டை நாட்டார் படையெடுத்திட முயற்சிகள் செய்தவண்ணம் இருந்தனர். பக்தியுள்ள ஆயர் தங்களை காத்திட அதிதூதர் தூயமிக்கேலிடம் மன்றாட மக்களைக் கேட்டுக்கொண்டார். போருக்கு முந்தின இரவு அதிதூதர் ஆயருக்கு காட்சியளித்து, அடுத்தநாள் பகைவர்கள் தோற்று ஓடிடுவர் என்றார். அடுத்ததினம் யுத்தம் ஆரம்பமானதும் பெரும்புயல் வீசியது. பயங்கர இடியும் மின்னலும் ஏற்பட்டன. மின்னல் அம்புபோல் பாய்ந்து பகைவரை தாக்கின எதிரிகள் எதிர்க்க இயலாது படைக்களம் விட்டு பயந்து ஓட்டம்பிடித்தனர், புறமுதுகு காட்டி ஓடினர். இவ்வெற்றியின் நினைவாக அங்கு இருந்த கெபி ஒரு ஆலயமாக மாற்றியமைக்கபட்டது. பல புதுமைகள் இங்கு நடந்தேறின. திருச்சபையும் அவருக்கு திருநாள் அமைத்தது. செப்டம்பர் 29-ல் அவர் திருநாள் சிறப்பிக்கப்படுகிறது.

          பசாசுகளின் சகல மாய்கையிளிருந்தும் நம்மைக்காப்பவர் தூயமிக்கேல் அதிதூதர் போர் வீரர்களின் பாதுகாவலராகவும் அவர் புகழப்படுகிறார் உலகம் உடல். அலகை என்பனவற்றுடன் நாம் அன்றாடம் நடத்தும் போரில் வெற்றியடைய அவரின் உதவி நமக்குத்தேவை எனவே அவர்மீது பக்தி கொண்டு அவரை வேண்டுவது, சிறந்த பக்தி முயற்சியாகும் 

          அதிதூதர் மிக்கேல் வலிமை பொருந்தியவர், திருச்சபைக்குப் பாதுகாவலர், கிறிஸ்தவ நாடுகளுக்கும், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பாதுகாவலர்.

      அது மட்டுமின்றி, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் உதவியாளரும் புனிதமிக்கேலே! அவர்களைத் தேற்றுபவரும் புனிதமிக்கேலே! மரித்தோருக்கானத் திருப்பலியில்  

          தேவரீர் முற்காலத்தில் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியாருக்கும் வாக்களித்த பேரின்ப ஒளிக்கு அவர்களை வெற்றிக்கொடி தாங்கும் தூயமிக்கேல் தூதர் அழைத்துச் செல்வாராக என வேண்டப்படுகிறது. 

    நமது துன்ப வேளையில் தவறாது உதவும் நண்பர் தூயமிக்கேல் அதிதூதர். 

    அணுகுவோரை ஆதரிப்பவர் தூயமிக்கேல் அதிதூதர். 

     வேண்டுவோரை வாழவைப்பவர் தூயமிக்கேல் அதிதூதர்.

     நமக்காகவும், நம் மறைக்காகவும் அவரை அனுதினமும் வேண்டிடுவோம்.

ANITO C. DHAS

1 comment: